டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் ஒன்பதாவது ஆட்டத்தில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தியதன்மூலம் மூன்றாவது வெற்றியை தனது வசமாக்கியது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி.

அதேநேரத்தில் காரைக்குடி அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 2-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது காரைக்குடி அணி. அந்த அணியின் தொடக்க வீரர்களான அனிருத்தா ஸ்ரீகாந்த், விஷால் வைத்யா ஆகியோர் தலா 1 ஓட்டம் மட்டுமே எடுத்து பங்கமாக வெளியேறினர்.

பின்னர் வந்த கேப்டன் எஸ்.பத்ரிநாத் 12 ஓட்டங்கள், ராஜாமணி ஸ்ரீனிவாசன், சந்திரசேகர் கணபதி ஆகியோர் தலா 2 ஓட்டங்களில் அவுட்டாக, 6 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது காரைக்குடி அணி.

பின்னர் வந்தவர்களில் சுவாமிநாதன் 15 ஓட்டங்களிலும், ராஜ்குமார் ஓட்டம் ஏதுமின்றியும் வெளியேறினர்.

சிக்ஸர்களையும், பவுண்டரியை விரட்டிய ஷாஜன் 29 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

கடைசிக் கட்டத்தில் சுநீல் சாம் 15 ஓட்டங்கள், சுரேஷ் பாபு ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்கள் சேர்க்க, காரைக்குடி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்கள் சேர்த்தது.

தூத்துக்குடி அணி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், வாஷிங்டன் சுந்தர், ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய தூத்துக்குடி அணியில் தொடக்க வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட, மறுமுனையில் கெளஷிக் காந்தி 5 ஓட்டங்கள், உமாசங்கர் சுஷீல் 11 ஓட்டங்கள் அவுட்டானார்கள்.

பின்னர் எஸ்.பி.நாதன் களமிறங்க, வாஷிங்டன் சுந்தர் தொடர்ந்து அதிரடியாக ஓட்டங்கள் சேர்க்க, 7.2 ஓவர்களில் 50 ஓட்டங்களை எட்டியது தூத்துக்குடி.

அந்த அணி 76 ஓட்டங்களை எட்டியபோது நாதன் 20 ஓட்டங்களில் ஆட்டமிழக்க களம்புகுந்தார் கேப்டன் சுப்பிரமணியன் ஆனந்த். அவர் 7 ஓட்டங்களில் வெளியேறினார்.

வாஷிங்டன் சுந்தர் 45 பந்துகளில் அரை சதம் விளாச, தூத்துக்குடியின் வெற்றி எளிதானது.

இறுதியில் 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்கள் குவித்து வெற்றி கண்டது தூத்துக்குடி அணி.

வாஷிங்டன் சுந்தர் 47 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள், ஆகாஷ் சம்ரா 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

காரைக்குடி அணி தரப்பில் சுநீல் சாம், மோகன் பிரசாத், சுரேஷ் பாபு ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின்மூலம் தூத்துக்குடி அணி தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.