டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் ஆறாவது ஆட்டத்தில் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி காரைக்குடி காளை அணி வெற்றிப் பெற்றது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த காரைக்குடி அணியில் அனிருத்தா ஸ்ரீகாந்த் - விஷால் வைத்யா இணை முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவர்களில் 104 ஓட்டங்கள் குவித்தது. அனிருத்தா 40 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் வந்த கேப்டன் பத்ரிநாத் 12 ஓட்டங்களில் வெளியேற விஷால் 51 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார்.

பின்னர் வந்த ஷாஜகான் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்கள் சேர்க்க, காரைக்குடி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அடுத்து பேட் செய்த மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் ஷாரூக் கான் 39 ஓட்டங்களும், சந்திரன் 26 ஓட்டங்களும் எடுத்தனர்.

முன்னணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன்படி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி காரைக்குடி காளை அணி வெற்றிப் பெற்றது.