டிஎன்பிஎல் என்னும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் திருநெல்வேலி ஐசிஎல் மைதானத்தில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஏ.இ.ராஜன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், “டிஎன்பிஎல் போட்டி சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலியில் உள்ள ஐசிஎல் கிரிக்கெட் மைதானத்தில் 12 லீக் ஆட்டம் மற்றும் ஒரு பிளே ஆஃப் போட்டி நடைபெறுகிறது. ஆனால், இந்த மைதானத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.

மைதானத்திற்குள் சென்று வருவதற்கு ஒரே ஒரு நுழைவுவாயில் மட்டுமே உள்ளது. மைதானத்தில் மூன்றாயிரம் இருக்கைகளே உள்ளன. ஆனால், பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் போட்டிகளைக் காண வருவர். அதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் அங்கு ஏற்படுத்தப்படவில்லை.

எனவே இந்த மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள போட்டிகளை வேறு கிரிக்கெட் மைதானங்களில் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அதனை விசாரித்த நீதிபதிகள், “திருநெல்வேலி ஐசிஎல் மைதானத்தில் தேவையான அடிப்படை வசதிகளை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.