புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியில் விறுவிறுப்பாக நடைப்பெற்ற தமிழ் தலைவாஸ் - அரியாணா ஸ்டீலர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 25-25 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டி அகமதாபாதில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ரைடின் மூலம் புள்ளிக் கணக்கைத் தொடங்கியது அரியாணா. மூன்றாவது நிமிடத்தில் அரியாணா 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பிறகு பிறகு தொடர்ச்சியாக மூன்று புள்ளிகளைக் கைப்பற்றிய தமிழ் தலைவாஸ் அணி, 5-வது நிமிடத்தில் 5-4 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

பின்னர் அரியாணா 9-7 என்ற கணக்கில் முன்னிலை பெற, அதற்கு தமிழ் தலைவாஸ் அணி பதிலடி கொடுத்த்தால் 18-வது நிமிடத்தில் இரு அணிகளும் 10-10 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

தொடர்ந்து மூன்று புள்ளிகளைப் பெற்ற அரியாணா, முதல் பாதி ஆட்டநேர முடிவில் 13-10 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, 24-வது நிமிடத்தில் அரியாணாவை ஆல் அவுட்டாக்கியதன்மூலம் 17-14 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

பின்னர் அரியாணாவின் ஆட்டத்தால் 35-வது நிமிடத்தில் இரு அணிகளும் 22-22 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

கடைசி ஐந்து நிமிடங்களில் இரு அணிகளும் அபாரமாக ஆட, 39-வது நிமிடத்தில் அரியாணா 25-24 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் வீரர் டாங் ஜியோன் லீ தனது சிறப்பான ரைடின் மூலம் ஒரு புள்ளியைப் பெற்றுத் தர, தமிழ் தலைவாஸ் தோல்வியிலிருந்து தப்பியது. ஆட்டம் 25-25 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.