அடுத்த மாதம் இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு டி20 தொடருக்கு மூன்று தமிழக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, 5-1 என ஒருநாள் தொடரையும், 2-1 என டி20 தொடரையும் வென்று அசத்தியது.

இதையடுத்து இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இலங்கையின் 70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்தியா-இலங்கை-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் மார்ச்  6ம் தேதி தொடங்கி 18ம் தேதி நிறைவடைகிறது.

இத்தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக விளையாடிவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான தோனிக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்படுகிறது. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கீப்பராக களமிறக்கப்படுகிறார்.

அதேபோல கேப்டன் விராட் கோலிக்கும் ஓய்வளிக்கப்படுகிறது. அதனால் கேப்டன் பொறுப்பை ரோஹித் வகிக்க உள்ளார். ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்படுகிறது. 

அவர்களுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர்களான விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க தொடரிலேயே விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு இலங்கை முத்தரப்பு தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதனால் ரோஹித் சர்மா தலைமையில் இளம் அணி இலங்கை முத்தரப்பு தொடரில் களமிறங்குகிறது. இந்த அணியில் மூன்று தமிழக வீரர்கள் உள்ளனர். தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூன்று தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி: 

ரோகித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான்(துணைக் கேப்டன்), கே.எல். ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், விஜய் சங்கர், சர்துல் தாக்கூர், ஜெயதேவ் உனட்கத், முகம்மது சிராஜ், ரிஷ்பா பந்த்(விக்கெட் கீப்பர்)