நிடாஹஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை ரசிகர்கள் இந்தியாவுக்கு அளித்த ஆதரவு ஆச்சர்யமளித்தது என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறினார்.

இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்ற அந்த முத்தரப்பு டி20 இலங்கையில் நடைபெற்றது. அதன் இறுதி ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி 'த்ரில்' வெற்றி கண்டது.

அந்தத் தருணம் குறித்து பின்னர் தினேஷ் கார்த்திக் கூறியது: "நான் பேட் செய்த ஒவ்வொரு பந்திலும் பௌண்டரி அடிக்க முயற்சித்தேன். கடைசி இரு ஓவர்களில் பந்தை கணிப்பதற்காக எல்லைக் கோட்டை (க்ரீஸ்) தாண்டி நின்றேன். அதற்கு பலன் கிடைத்தது.

கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தது ஓர் அருமையான தருணம். அது, வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.

இறுதி ஆட்டத்தில் இலங்கை ரசிகர்கள் இந்தியாவுக்கு அளித்த ஆதரவு ஆச்சர்யமளித்தது. உண்மையில் பேட்டிங்கின்போது அது மிகவும் உந்துதலாக இருந்தது.

கடின உழைப்பு மேற்கொண்டிருந்ததால், இறுதியில் சாம்பியன் ஆனது திருப்தி அளிப்பதாக உள்ளது. எனக்கு அளித்த ஆதரவுக்காக அணியின் உதவிப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.