உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மனோஜ் குமார், கவிந்தர் பிஷ்த், அமித் பாங்கல். கௌரவ பிதூரி ஆகியோர் தங்களது எடைப் பிரிவில் 2-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.

பத்தொன்பதாவது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் வெல்டர்வெயிட் 69 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மனோஜ் குமார் தனது முதல் சுற்றில் மால்டோவாவின் வாசிலி பெலெளûஸ எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முடிவில் 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் மனோஜ் குமார் வெற்றி பெற்றார்.

அவர் தனது 2-வது சுற்றில், போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் வெனிசூலாவின் கேப்ரியேல் மாஸ்ட்ரே பெரேஸை எதிர்கொள்கிறார்.

ஃப்ளைவெயிட் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கவிந்தர் பிஷ்த் தனது முதல் சுற்றில் ஜப்பானின் ரியுசெய் பாபாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முடிவில் 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் கவிந்தர் பிஷ்த் வெற்றிப் பெற்றார்.

அவர் தனது 2-வது சுற்றில், போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அல்ஜீரியாவின் முகமது ஃப்லிஸ்ஸியை எதிர்கொள்கிறார்.

இதனிடையே, மார்க்கி குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீரர்களான அமித் பாங்கல் 49 கிலோ எடைப் பிரிவிலும், கெளரவ் பிதூரி 56 கிலோ எடைப் பிரிவிலும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.