There is no compromise in winning the Champion Cup in Pro Kabaddi League - Anup Kumar
ஐந்தாவது சீசன் புரோ கபடி லீக்கில் சாம்பியன் கோப்பையை தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வரவேண்டும். அதில் சமரசமில்லை என்று இந்திய அணியின் கேப்டனான அனுப் குமார் தெரிவித்தார்.
இந்திய கபடி வரலாற்றில் தலைசிறந்த ரைடர்களில் ஒருவர், தலைசிறந்த கேப்டன், ஆகச்சிறந்த வீரர், அரியாணா காவல் துறையின் சீனியர் இன்ஸ்பெக்டர் என பன்முகங்களைக் கொண்டவராக திகழ்கிறார் அனுப் குமார்.
புரோ கபடி லீகில் யு-மும்பா அணியின் கேப்டனாக இருக்கிறார்.
ஐந்தாவது சீசன் புரோ கபடி லீக் வரும் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்காக மாஷல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் மும்பையில் நடைபெற்ற புரோ கபடி லீக் கருத்தரங்கில் பங்கேற்ற அனுப் குமாருடன் பேசியது:
“குருகிராம் அருகேயுள்ள எனது சொந்த ஊரான பால்ராவில் கபடிதான் பிரபல விளையாட்டு. அதனால் நானும் கபடி விளையாடத் தொடங்கினேன். பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்தேன். ஆரம்ப காலத்தில் மட்டுமே அணியில் 7 பேரில் ஒருவராக இடம்பிடிக்க கஷ்டப்பட்டேன். அதன்பிறகு நான் ஒருபோதும் மாற்று வீரராக வெளியில் அமர வைக்கப்பட்டதில்லை.
சிஆர்பிஎஃப், ஏர் இந்தியா போன்ற அணிகளுக்காக விளையாடியபோதெல்லாம் பெரும்பாலும் கேப்டனாகவே செயல்பட்டுள்ளேன். தற்போது இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்திருக்கிறேன். கபடி, என் வாழ்க்கையையே மாற்றியிருக்கிறது. சாதாரண மனிதனான எனக்கு பணம், புகழ் எல்லாமே கபடியால்தான் கிடைத்திருக்கிறது. கபடி இல்லை என்றால், நான் இப்போது உங்கள் முன்னால் நின்றிருக்க முடியாது.
கேப்டன் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். கேப்டனாக இருப்பவர் தானும் சிறப்பாக விளையாட வேண்டும், சகவீரர்களையும் சரியான முறையில் வழிநடத்த வேண்டும். எல்லா விளையாட்டிலுமே நெருக்கடியை சந்தித்துதான் ஆகவேண்டும். அதுபோன்ற சூழல்களில் அமைதியாகவே இருப்பேன். சகவீரர்களிடம் கோபப்படமாட்டேன். ஒருவேளை நான் கோபத்தில் அவர்களை நோக்கி உரக்கக் கத்தினால், மேலும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். அதன் காரணமாக அவர்கள் தவறு செய்யக்கூடும். எனவே அவர்களிடம் கோபப்படுவதில்லை. அதற்குப் பதிலாக அவர்களின் ஆட்ட உத்திகளை மாற்றுமாறு கூறுவேன்.
ஐந்தாவது சீசன் புரோ கபடி லீக்கில் சாம்பியன் கோப்பையை தூக்கிக் கொண்டு மைதானத்தை வலம் வரவேண்டும். அதில் சமரசமில்லை. இந்த முறை மூன்று மாதங்கள் போட்டி நடைபெறவுள்ளது. எல்லா அணியினருமே தங்களின் 8 அல்லது 9 வீரர்கள் இந்த சீசனில் முழுமையாக விளையாட வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதற்கு 'பிட்னஸ்' மிக முக்கியமாகும். அதற்காக டேராடூனில் 20 நாள் பயிற்சியை நாங்கள் நிறைவு செய்துள்ளோம்.
