There is a duty owed to me Manohar casank resignation gets back

ஐசிசி நிர்வாகத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், புதிய சேர்மன் நியமிக்கப்படும் வரை எனது ராஜிநாமாவை திரும்ப பெற்று, சேர்மனாக தொடர்கிறேன் என்று சஷாங்க் மனோகர் தெரிவித்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக சேர்மன் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக சஷாங்க் மனோகர் கடந்த வாரம் அறிவித்திருந்தார். அவருக்கான பதவிக் காலம் மொத்தம் 2 ஆண்டுகள் இருந்த நிலையில், 8 மாதங்களிலேயே அவர் இந்த முடிவை மேற்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சஷாங்க் மனோகர் சேர்மன் பதவியில் நீடிக்கக் கோரி ஐசிசி இயக்குநர்கள் குழு கொண்டு வந்த தீர்மானத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது.

அதனையடுத்து, ஐசிசியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்வாக மற்றும் நிதி மறுகட்டமைப்பு நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில் சஷாங்க் மனோகர் சேர்மன் பதவியில் தொடர வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தத் தீர்மானத்தை அடுத்து தனது முடிவு குறித்து சஷாங்க் மனோகர் கூறியதாவது:

“என் மீதான ஐசிசி இயக்குநர்களின் அன்பு மற்றும் நம்பிக்கையை மதிக்கிறேன். அதன்படி, சேர்மன் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக கூறிய முடிவை திரும்பப் பெறுகிறேன்.

ஐசிசியின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் நிறைவடையும் வரையில் சேர்மன் பதவியில் தொடரத் தயாராக உள்ளேன்.

ஐசிசி நிர்வாகம் தொடர்பான நமது பணி சுமுகமாக தொடரும் வகையில், சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று சஷாங்க் மனோகர் கூறினார்.

இதனிடையே, ஐசிசி தனது அடுத்த இயக்குநர்கள் கூட்டத்தில் நிறைவேற்றுவதாக இருக்கும் சட்டம் மற்றும் நிதி தொடர்பான மறுசீரமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பிசிசிஐ-க்கு போதிய பலம் கிடைத்துள்ளதை அடுத்து, சஷாங்க் மனோகர் சேர்மன் பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.