கோவில்பட்டியில் நடைபெற்று வரும் இலட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான ஒன்பதாவது அகில இந்திய வலைகோல் பந்தாட்டப் போட்டியில் கபுர்தலா ஆர்.சி.எப்., செகந்திராபாத் தெற்கு மத்திய இரயில்வே, டெல்லி ஓ.என்.ஜி.சி. அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் இலட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான ஒன்பதாவது அகில இந்திய ஹாக்கிப் போட்டியின் எட்டாவது நாளான நேற்று காலையில் நடைபெற்றது.

இதன் முதல் ஆட்டத்தில் கபுர்தலா ஆர்.சி.எப். அணியும், மகாராஷ்டிர காவல் அணியும் மோதியதில் கபுர்தலா அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மாலையில் நடைபெற்ற ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய இரயில்வே அணியும், ஒடிஸா கிழக்கு கடற்கரை இரயில்வே அணியும் மோதியதில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டதில் செகந்திராபாத் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆதேபோன்று மற்றொரு ஆட்டத்தில் டெல்லி ஓ.என்.ஜி.சி. அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜலந்தர் இ.எம்.இ. கார்ப்ஸ் அணியை வீழ்த்தியது.

வெற்றி பெற்ற அனைத்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. ஒன்பதாவது நாளான இன்று மாலை 5 மற்றும் 6.30 மணிக்கு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.