The second time India - Australia confrontation today

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் குவாஹாட்டியில் இன்று நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் நினைப்போடு களமிறங்குகிறது. 

ஒரு நாள் தொடரில் படுதோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரை வெல்லும் முனைப்போடு களமிறங்குகிறது.

இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. ரோஹித் சர்மா, ஷிகர் தவன் கூட்டணி வலுவான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் விராட் கோலி, மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, பாண்டியா கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணியும் பலம் சேர்க்கின்றன.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் பெரும்பாலானோர் இந்திய ஆடுகளங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். எனினும் அவர்களால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை.

எனவே இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். இந்தத் தொடரில் தொடர்ச்சியாக ரன் குவித்து வரும் ஆரோன் ஃபிஞ்ச், இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி ரன் குவிப்பார். 

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கிளன் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்ரிக்ஸ், டேனியல் கிறிஸ்டியன், டிம் பெய்ன் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சில் நாதன் கோல்ட்டர் நீல் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார்.

கடந்த ஆட்டத்தில் அறிமுக வீரராக களம் கண்ட ஜேசன் பெஹ்ரென்ட்ராப் சிறப்பாக பந்துவீசுவார். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆடம் ஸம்பாவையே நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.