இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ், “நிச்சயமாக இது என்னுடைய கடைசி சென்னை ஓபன் போட்டி கிடையாது” எனத் தெரிவித்துள்ளார். 

சென்னை ஓபனில் 17-வது முறையாக களமிறங்கியுள்ள லியாண்டர் பயஸ், சில நாள்களுக்கு முன்பு, “எனது 20 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கை இந்த ஆண்டோடு முடிவுக்கு வரலாம். 43 வயதிலும் விளையாடிக் கொண்டிருக்கிறேன் என்றால், நிச்சயம் நான் ஆசிர்வதிக்கப்பட்ட நபர். இப்போது எனது மகிழ்ச்சிக்காக டென்னிஸ் ஆடி வருகிறேன். எனினும், எதுவும் ஒரு நாள் முடிவுக்கு வந்தாக வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

சென்னை ஓபனில் பிரேசிலின் ஆண்ட்ரே சாவுடன் இணைந்து களமிறங்கினார். ஆனால் முதல் சுற்றிலேயே தோற்றுப் போனார். ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பிரேசிலின் ஆண்ட்ரே சா ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட்களில் இந்தியாவின் பூரவ் ராஜா - திவிஜ் சரண் ஜோடியிடம் தோல்விக் கண்டது.

ஓய்வு குறித்த செய்திகள் தொடர்பாக பயஸ் கூறியதாவது:

“நான் மீண்டும் சென்னை ஓபன் போட்டியில் விளையாடி கோப்பையை வெல்ல ஆவலாக உள்ளேன். எனவே, நிச்சயமாக இது என்னுடைய கடைசி சென்னை ஓபன் போட்டி கிடையாது.

சோம்தேவ் ஓய்வு பெற்றபோது என்னிடமும் ஓய்வு குறித்து கேட்கப்பட்டது. ஆனால், அதற்கான பதில் வேறுமாதிரியாக பத்திரிகைகளில் இடம் பெற்றுவிட்டது. உடனே லியாண்டர் ஓய்வு பெறுகிறார் என்று செய்திகள் வெளிவந்துவிட்டன.

நான் டென்னிஸை இன்னமும் விரும்புகிறேன். தொடர்ந்து போராடி பல போட்டிகளை வெல்லவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.