The first player to score 100 goals in the Champions League Ronaldo
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 100 கோல்களை அடித்த முதல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற பெயரை தனது வசமாக்கினார் ரொனால்டோ.
ஜெர்மனியின் மூனிச் நகரில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியின் காலிறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பேயர்ன் மூனிச் அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தின் 25-ஆவது நிமிடத்தில் பேயர்ன் அணியின் விடால் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் அனைத்தும் தலைகீழானது.
47-ஆவது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் ரொனால்டோ கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது.
61-ஆவது நிமிடத்தில் பேயர்ன் அணியின் ஜேவி மார்ட்டினிஸ் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். அதனால், அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ 77-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தார். அது வெற்றிக் கோலாக அமைந்தது. இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் 2 கோல்களை அடித்ததன் மூலம் சாம்பியன்ஸ் லீகில் 100 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமை ரொனால்டோ வசமானது.
