இந்திய "ஏ' அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 327 ஒட்டங்கள் எடுத்து தெறிக்கவிட்டது.
அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 161 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 107 ஒட்டங்களும், ஷான் மார்ஷ் 173 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 104 ஒட்டங்களும் குவித்து ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறினர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 23-ஆம் தேதி புணேவில் தொடங்குகிறது.
அதனை முன்னிட்டு ஆஸ்திரேலியா – இந்திய "ஏ' அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சிப் போட்டி மும்பையில் நேற்றுத் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய "ஏ' அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, டேவிட் வார்னரும், ரென்ஷாவும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை தொடங்கினர்.
வார்னர் 25, ரென்ஷா 11 ஒட்டங்களில் வெளியேற, 16.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ஒட்டங்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா.
இதனையடுத்து கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும், ஷான் மார்ஷும் ஜோடி சேர்ந்தனர். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி, இந்திய பெளலர்களை மிக எளிதாக எதிர்கொண்டது. இந்த ஜோடியை வீழ்த்த 7 பெளலர்களை பயன்படுத்தினார் கேப்டன் ஹார்திக் பாண்டியா.
ஆனால் அசராமல் ஆடிய ஸ்மித் சதமடித்தார். அவர் 167 பந்துகளில் 1 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 107 ஒட்டங்கள் குவித்த நிலையில் மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறினார். ஸ்மித் - மார்ஷ் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 156 ஒட்டங்கள் சேர்த்தது.
இதையடுத்து களம் கண்ட பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் நிதானமாக ஆட, ஷான் மார்ஷ் 173 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 104 ஒட்டங்கள் குவித்து ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியேறினார்.
ஆஸ்திரேலியா 305 ஒட்டங்களை எட்டியபோது பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்பை வீழ்த்தினார் பாண்டியா. அவர் 70 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 45 ஒட்டங்கள் எடுத்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 327 ஒட்டங்கள் குவித்துள்ளது.
மிட்செல் மார்ஷ் 16, மேத்யூ வேட் 7 ஒட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்திய "ஏ' அணி தரப்பில் நிதின் சைனி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
