ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ளன. 

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. ஆசிய கோப்பை தொடர்  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடக்க இருக்கும் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ராகுல் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் ஆடிய தினேஷ் கார்த்திக் ஓரளவிற்கு ஆடினாலும் சிறப்பான இன்னிங்ஸ் எதுவும் ஆடவில்லை. ஆனால் ஆஃப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் களமிறக்கப்பட்ட ராகுல், சிறப்பாக ஆடினார். எனவே தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ராகுல் களமிறக்கப்படலாம்.

ரோஹித், தவான், ராயுடு, தோனி ஆகியோர் ஆடுவது உறுதி. அதேபோல கேதர் ஜாதவும் ஆடுவார். பவுலர்களை பொறுத்தமட்டில் புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் கண்டிப்பாக ஆடுவர். ஆனால் சாஹலுக்கு பதிலாக கலீல் அகமது சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

ஏனென்றால் வங்கதேச வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கானின் பவுலிங்கில் திணறினர். எனவே இடது கை வீச்சாளர் கலீல் அகமது சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

இறுதி போட்டியில் வங்கதேசத்துடன் மோதும் உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான்(துணை கேப்டன்), அம்பாதி ராயுடு, கேஎல் ராகுல், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா, கலீல் அகமது.