நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டி நாளை நடக்கிறது. 

வெலிங்டனில் நடந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே அசத்திய நிலையில், இந்திய அணியோ மூன்றிலுமே சொதப்பியது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே அடித்து ஆடியது. அவ்வப்போது இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் கடைசிவரை அந்த அணியின் அதிரடியை கட்டுப்படுத்த முடியவில்லை. 219 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, இந்திய அணியை 139 ரன்களில் சுருட்டி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 போட்டிகளில் இந்திய அணியின் மோசமான தோல்வி இதுதான். 

முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. முதல் போட்டியில் சரியாக ஆடாவிட்டாலும் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. விஜய் சங்கர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியிலிருந்து தூக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. சாஹலை தூக்கிவிட்டு குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம். இதைத்தவிர வேறு மாற்றத்திற்கு வாய்ப்பில்லை. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், விஜய் சங்கர், ரிஷப் பண்ட், தோனி(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது.