ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வங்கதேச வீரர் தமீம் இக்பாலின் செயல், ரசிகர்களை வியக்க வைத்தது. 

ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்துவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் ஓராண்டுக்கு பிறகு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா களமிறங்கினார். 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளை முதல் ஓவரிலேயே வீழ்த்தி மிரட்டினார் மலிங்கா. லிட்டன் தாஸ் மற்றும் ஷாகிப் அல் ஹாசன் ஆகிய இருவரும் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகினர். லக்மல் வீசிய இரண்டாவது ஓவரில் கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு தமீம் இக்பால் ரிடையர் ஹர்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். அவருக்கு மணிக்கட்டில் பலத்த காயம் ஏற்பட்டதால் கையில் கட்டு போடப்பட்டது. 

அதன்பிறகு முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் மிதுன் ஆகியோர் இணைந்து வங்கதேச அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 133 ரன்களை சேர்த்தது. மிதுன் 63 ரன்களில் மலிங்கா பந்தில் அவுட்டானார். அதன்பிறகு விக்கெட்டுகள் ஒருமுனையில் மளமளவென சரிய, மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ரஹீம் சதமடித்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் 9 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டன.

47வது ஓவரின் ஐந்தாவது பந்தில் முஷ்தாஃபிசுர் ரன் அவுட்டாக, இன்னும் மூன்று ஓவர்கள் எஞ்சியிருந்தது. மறுபுறம் ரஹீம் நல்ல ஃபார்மில் ஆடிவருகிறார். அதனால் வலியையும் பொருட்படுத்தாமல் ரஹீமை தொடர்ந்து ஆடவைப்பதற்காக களத்திற்கு வந்தார் தமீம் இக்பால். கையில் போடப்பட்டிருந்த கட்டை கழட்டி வைத்துவிட்டு தமீம் களத்திற்கு வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

களத்திற்கு வந்தது மட்டுமல்லாமல், லக்மல் வீசிய 47வது ஓவரின் கடைசி பந்தை ஒற்றை கையால் பேட்டிங் பிடித்து ஸ்ட்ரோக் வைத்தார். அணிக்காக அவரது அர்ப்பணிப்பான ஆட்டத்தை கண்டு அனைவரும் வியந்தனர். அவரது அர்ப்பணிப்பு எதிரணி வீரர்களையும் வியக்கவைத்தது. அதன்பிறகு ரஹீம் மட்டுமே 32 ரன்கள் சேர்த்தார். ஒருவேளை தமீம் களத்திற்கு வரவில்லை என்றால், அந்த 32 ரன்கள் கிடைத்திருக்காது. 

262 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 124 ரன்களுக்கே ஆல் அவுட்டானதால், 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.