tamilnadu women basketball team won at first round

ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் முதல் சுற்றில், மகளிர் பிரிவில் தமிழக அணி, மேற்கு வங்கத்தை வீழ்த்தி முந்திக் கொண்டு வெற்றி பெற்றது.

31-ஆவது தேசிய கூடைப்பந்துப் போட்டிகள், தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகம், அரைஸ் அறக்கட்டளை, கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம், பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றின் சார்பில் கோவை, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நேற்றுத் தொடங்கின.

இந்தப் போட்டியில், நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவின் முதல் ஆட்டத்தில், தமிழக அணி 72 - 67 என்றக் கணக்கில் அசத்தலாக ஆடி மேற்கு வங்க அணியைத் தோற்கடித்தது.

மற்றொரு ஆட்டத்தில், கேரள அணி 74 - 36 என்ற கணக்கில் டெல்லியை வீழ்த்தியது.

இன்னொரு ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணி 69 - 51 என சத்தீஸ்கர் அணியை சாய்த்தது.

மற்றொரு ஆட்டத்தில், தெலங்கானா 70 - 39 என்ற புள்ளிக் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

அதேபோன்று, ஆடவர் பிரிவின் முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராணுவ அணி 57 - 51 என்ற புள்ளியில் விமானப் படை அணியை வீழ்த்தியது.

இரண்டாவது ஆட்டத்தில், டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணி 75 - 64 என மத்திய ரயில்வே அணியை தோற்கடித்தது.