புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி 32-27 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்றது.

புரோ கபடி லீக் சீசன் – 5 ஐதராபாதில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் அறிமுக அணியான தமிழ் தலைவாஸும், தெலுங்கு டைட்டன்ஸýம் மோதின.

இந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் கேப்டன் ராகுல் செளத்ரி தனது அபார ரைடின் மூலம் தமிழ் தலைவாஸ் வீரர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தினார். இதனால் தெலுங்கு டைட்டன்ஸ் 7-4 என முன்னிலை பெற்றது.

எனினும் 12-வது நிமிடத்தில் சூப்பர் டேக்கிள் மூலம் சரிவிலிருந்து மீண்ட அணி தமிழ் தலைவாஸ் அணி, ஸ்கோரை 8-8 என்ற புள்ளிகள் கணக்கில் சமன் செய்தது.

தெலுங்கு டைட்டன்ஸ், ஒரு நிமிடத்தில் 6 புள்ளிகளைப் பெற, அந்த அணி 14-8 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து ராகுல் செளத்ரி மேலும் 3 புள்ளிகளைக் கைப்பற்ற, முதல் பாதி ஆட்டநேர முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் 18-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்று அசத்தியது.

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் தெலுங்கு டைட்டன்ஸின் ஆதிக்கம்தான். 28-ஆவது நிமிடத்தில் ராகுல் செளத்ரி தனது 10-வது புள்ளியைக் கைப்பற்ற, அந்த அணி 25-15 என்ற புள்ளிகள் கணக்கில் வலுவான நிலையை எட்டியது.

35 நிமிடங்களுக்குப் பிறகு தெலுகு டைட்டன்ஸ் அணி 29-19 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. கடைசி நிமிடத்தில் 3 புள்ளிகளைப் பெற்றாலும் தமிழ் தலைவாஸ் அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் தெலுங்கு டைட்டன்ஸ் 32-27 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.

10 புள்ளிகளை பெற்று முதல் போட்டியிலேயே "சூப்பர்-10' சாதனையை நிகழ்த்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ராகுல் செளத்ரி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.