Tamil Nadu Sub junior Chennai Madurai Tiruvallur player winners
தமிழ்நாடு சப்-ஜூனியர் ரேங்கிங் பாட்மிண்டன் போட்டியில் சென்னையின் ரித்விக் சஞ்சீவி, பிரணவி, மதுரையின் அஸ்வின் கார்த்திக், திருவள்ளூரின் தீப்தா ஆகியோர் தங்களது பிரிவில் கோப்பை வென்று அசத்தினர்.
தமிழ்நாடு பாட்மிண்டன் சங்கத்தின் ஒத்துழைப்புடன், ஹெ.ச்.ஏபி பாட்மிண்டன் மையம் சார்பில் தமிழ்நாடு சப்-ஜூனியர் ரேங்கிங் பாட்மிண்டன் போட்டி நடத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி தொடங்கி இந்தப் போட்டி நடைபெற்று வந்தது.
இதில் 13 மற்றும் 15 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு13 மற்றும் யு15) பிரிவுகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 646 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் 15 வயதிற்கு உள்பட்டோருக்கான ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சென்னையின் ரித்விக் சஞ்சீவி மற்றும் சென்னையின் சித்தாந்த் குப்தா மோதினர். இதில், 21-17, 16-21, 21-14 என்ற செட் கணக்கில் சித்தாந்த் குப்தாவை வென்றார் ரித்விக் சஞ்சீவி.
அதேபோன்று, மகளிர் ஒற்றையர் பிரிவில் சென்னையின் பிரணவி மற்றும் கோவையின் தான்யா மோதினர். இதில், 21-18, 21-12 என்ற செட் கணக்கில் தான்யாவை வீழ்த்தினார் பிரணவி.
மற்றொரு ஆட்டமான யு-13 பிரிவு இறுதிச்சுற்றில் மதுரையைச் சேர்ந்த அஸ்வின் கார்த்திக் 21-15, 15-21, 21-7 என்ற செட் கணக்கில் கோவையின் நிதினை வென்று கோப்பை பெற்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் திருவள்ளூரின் தீப்தா 21-18, 21-15 என்ற செட் கணக்கில் ஜெயானியை வென்றார்.
