Tamil Nadu south korea Oman Malaysia countries players are in my team

புரோ கபடிப் போட்டியில் முதல்முறையாக களமிறங்கவுள்ள தமிழ் தலைவாஸ் அணியில் தமிழகம், தென் கொரியா, ஓமன், மலேசியா நாடுகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி வருண் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

புரோ கபடி லீக் ஐந்தாவது சீசன் போட்டி வரும் 28-ஆம் தேதி ஐதராபாதில் தொடங்குகிறது. மூன்று மாதங்கள் நடைபெறவுள்ள இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் உள்ளிட்ட நான்கு புதிய அணிகள் களமிறங்குகின்றன. இதனால் இந்த சீசனில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் புரோ கபடி லீக் போட்டி தொடர்பான கருத்தரங்கு மும்பையில் சமீபத்தில் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற தமிழ் தலைவாஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வருண் பேசியது:

“தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர், தென் கொரியாவைச் சேர்ந்த 2 பேர், ஓமன் மற்றும் மலேசியாவிலிருந்து தலா ஒருவர் உள்பட மொத்தம் 25 வீரர்கள் எங்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவரான அஜய் தாக்குர் மற்றும் அமித் ஹூடா போன்ற அனுபவ வீரர்கள், இளம் வீரர்கள் என சமபலம் கொண்ட அணியாக எங்கள் அணி உள்ளது. எங்கள் வீரர்களிடம் எவ்வித சவாலையும் சந்திக்கக்கூடிய நம்பிக்கை இருக்கிறது.

எங்கள் அணியினர் வரும் 8-ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து காட்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளனர். முதல் காட்சிப் போட்டி கோவையில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் காட்சிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

நாங்கள் செல்லும் ஊர்களில் பலம் வாய்ந்த அணிகள் இருந்தால், அதில் இருந்து முக்கிய வீரர்களை எங்கள் அணியுடன் கலந்து காட்சிப் போட்டிகளில் விளையாடுவோம். இதுதவிர பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் எங்கள் அணியைப் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

வானொலி, தொலைக்காட்சிகள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் எங்கள் அணியைப் பற்றிய பல்வேறு விஷயங்களை ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

இந்த சீசனைப் பொறுத்தவரையில் போதிய காலஅவகாசம் இல்லாததால், சென்னையில் உள்ள ஜவாஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் மட்டுமே போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சீசனில் சென்னைக்கு வெளியே போட்டியை நடத்த முயற்சி எடுக்கப்படும்.

எங்கள் அணியின் உரிமையாளர்கள் வெற்றி, தோல்விகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. கபடி விளையாட்டை வளர்க்க வேண்டும், திறமையான இளம் கபடி வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம்” என்று அவர் பேசினார்.