சேலத்தில் செயற்கை இழை (சிந்தடிக்) விளையாட்டு மைதானம் அமைக்க அரசு, தனியார் தொண்டு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் கூறினார்.
பிரேசிலில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாரியப்பனுக்கு சேலத்தைச் சேர்ந்த பெஸ்ட் கல்வி அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இதையொட்டி நடைபெற்ற மெகா மாரத்தான் போட்டியில் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தொடக்கி வைத்தார்.
இதில், கோவை நாகேஷ் முதலிடத்தையும், விழுப்புரம் மணிகண்டன் இரண்டாமிடத்தையும், சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த வடிவேல் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
இவர்களுக்கு, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாரியப்பன் பரிசுத் தொகைகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.
அப்போது, மாரியப்பன் செய்தியாளர்களிடம், “சேலத்தில் செயற்கை இழை (சிந்தடிக்) விளையாட்டு மைதானம் அமைக்க அரசு, தனியார் தொண்டு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மிக விரைவில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்.
மேலும், எதிர்வரும் ஆசிய சாம்பியன்ஷிப், உலக சாம்பியன் போட்டிகளில் கலந்து கொள்வதற்காகத் தயாராகி வருகிறேன்” என்றுத் தெரிவித்தார்.
