T20 World Cup will have 20 teams in future - ICC
டி-20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தால் எதிர்காலத்தில் டி-20யில் 20 அணிகள் வரை இடம்பெறலாம் என ஐசிசி தெரிவித்துள்ளது.
ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் பேட்டியொன்றில் தெரிவித்தது:
“சர்வதேச அளவிலான ஐசிசி போட்டிகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்ட விரும்புகிறோம். அப்போதுதான் ஒவ்வொரு போட்டியும் தனித்தன்மையாகத் தெரிவதுடன், அத்தகைய போட்டி நடைபெறும்போது அதிகளவிலான ரசிகர்களையும், விளம்பரதாரர்களையும் ஈர்க்க முடியும்.
தற்போதைய நிலையில் அடுத்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்குப் பதிலாக நான்கு ஆண்டுகால இடைவெளியில் இரண்டு டி-20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவது தொடர்பாக யோசிக்கிறோம்.
இதுதொடர்பாக இலண்டனில் தற்போது நடைபெற்று வரும் ஐசிசியின் ஆண்டுக் கருத்தரங்கில் ஆலோசிக்கப்படும்.
டி-20 உலகக் கோப்பை போட்டியைப் பொருத்த வரையில், அது ரசிகர்களின் பேராதரவைப் பெற்றதுடன், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டித் தருகின்றன.
எங்களைப் பொருத்த வரையில், டி20 உலகக் கோப்பை போட்டியானது அதிக அணிகளை போட்டியில் சேர்ப்பதற்கான வாய்ப்புகளைத் தருகிறது. இதனால், எதிர்கால டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 20 அணிகள் வரையில் சேர்க்கப்படலாம்.
பத்து அணிகளைக் கொண்ட உலகக் கோப்பை போட்டியை நடத்துவதன் மூலம் அணிகளிடையேயான போட்டியையும், போட்டியின் தரத்தையும் ஒருசேர அதிகரிக்க முடியும் என நம்புகிறோம். மேலும் இரண்டு 50 ஓவர் போட்டிகளை நடத்துவதற்கான தேவை இருக்காது” என்று டேவிட் ரிச்சர்ட்சன் கூறினார்.
