T 20 cricket match India Vs South Africa .Indai win by 28 runs
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் கோலி டீம் சௌத் ஆப்பிரிக்கா அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வசப்படுத்தி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த நிலையில் அடுத்து இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி - 20 போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் முதலாவது ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது . போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 203 ரன்களை எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்ஸ் அபாயகரமான பேட்ஸ்மேனாக காணப்பட்டார். தென் ஆப்பிரிக்கா வரிசையாக விக்கெட்டை இழந்தாலும், நேர்த்தியான ஆட்டத்தை வெளிக்காட்ட முயற்சி செய்தது.
ஹென்ரிக்ஸ் உடன் பெஹர்டைன் கைகோர்த்து விளையாடிய போது இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை முன்னெடுத்தனர். தென் ஆப்பிரிக்காவிற்கு இந்தியா நெருக்கடியை கொடுத்தது. 14.6 வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 129/4 ரன்கள் எடுத்து இருந்த போது பெஹர்டைன் 39 ரன்களில் அவுட் ஆனார்.

17.1 ஓவரில் இந்தியா அணியின் அபார பந்து வீச்சால் ஹென்ரிக்ஸ் விக்கெட்டை கைப்பற்றியது, இது இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பை வலுப்படுத்தியது. இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள் றாரையும் இந்திய பந்துவீச்சாளர்கள் நின்று விளையாட அனுமதிக்கவில்லை, வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறினர்.
தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 175 ரன்கள் மட்டும் எடுத்து இருந்தது. இதையடுத்து இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று 20 ஓவர் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
