ஆஃப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் ரஷீத் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்குமாறு ரசிகர்கள் பலர் பதிவிட்ட டுவீட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிலளித்துள்ளார்.

19 வயதே ஆன ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான், ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக ஆடிவருகிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார். ஐபிஎல் 11வது சீசனின் இறுதி போட்டி இன்று நடக்க உள்ளது. இந்த சீசன் முழுவதுமே ரஷீத் கான் சிறப்பாக ஆடிவருகிறார். அணியின் வெற்றிக்கு முழுமையான பங்களிப்பை அளித்து வருகிறார்.

அதிலும் கொல்கத்தாவுக்கு எதிரான இரண்டாவது தகுதி சுற்று போட்டியில், 10 பந்துகளில் 34 ரன்கள் அடித்து பேட்டிங்கில் மிரட்டிய ரஷீத், மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு கேட்ச்சுகள் ஒரு ரன் அவுட் என ஃபீல்டிங்கிலும் அசத்தினார். கொல்கத்தாவை வீழ்த்தியது ஹைதராபாத் அணி என்று சொல்வதை விட ரஷீத் கான் என சொன்னால் மிகையாகாது. 

ரஷீத் கானின் ஆட்டத்தை கண்ட, சச்சின் மற்றும் டிராவிட் ஆகிய ஜாம்பவான்கள், ரஷீத் கான் உலகின் தலைசிறந்த ஸ்பின்னர் என புகழாரம் சூட்டியுள்ளனர்.

ரஷீத் கானுக்கு இந்தியாவிலும் ரசிகர் பட்டாளம் பெருகியுள்ளது. இந்திய ரசிகர்கள், தங்கள் ஆஸ்தான வீரர்கள் மீது அதிகமான அபிப்ராயம் கொண்டவர்கள். அது ரஷீத் கானின் விஷயத்திலும் நிரூபணமாகியுள்ளது. ரஷீத் கானின் திறமையை கண்டு வியந்த இந்திய ரசிகர்கள் பலர், ரஷீத் கானுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்தனர்.

இதைக் கண்ட சுஷ்மா ஸ்வராஜ், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு பதிலளித்து டுவீட் செய்துள்ளார். அதில், குடியுரிமை வழங்குவது உள்துறையின் அதிகாரத்துக்குட்பட்ட விஷயம் என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி, ரஷீத் கான் கிரிக்கெட் உலகின் சொத்து எனவும் அவரை இந்தியாவிற்கு விட்டுக்கொடுக்க முடியாது எனவும் கிண்டலாக டுவீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.