முதல் 6 ஓவர்களில் நாம் ஆதிக்கம் செலுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. கடந்த ஓராண்டாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவந்த சுரேஷ் ரெய்னா இந்த டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் இரண்டு டி20 போட்டிகளில் அதிகப்படியான ரன்களை குவிக்காவிட்டாலும் அதிரடி காட்டி மிரட்டினார். முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், இன்று மூன்றாவது டி20 போட்டி நடக்க இருக்கிறது. இதுதொடர்பாக பேசியுள்ள சுரேஷ் ரெய்னா, கடந்த இரண்டு போட்டிகளில் எனது ஆட்டம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 2 போட்டிகளிலுமே முதல் 6 ஓவர்களில் நமது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினர். எனவே முதல் 6 ஓவர்களில் நாம் ஆதிக்கம் செலுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.

என் மீது கேப்டன் கோலி மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். எனது பாணியிலேயே ஆட விரும்புகிறேன். இன்றைய போட்டியிலும் என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவேன். கேப்டன் கோலி அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றுவோம் என சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்தார்.