சர்வதேச டி20 போட்டியில் 50 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார்.

கடந்த ஓராண்டாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவந்த சுரேஷ் ரெய்னாவுக்கு, தென்னாப்பிரிக்க டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திய ரெய்னா, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

அதைத்தொடர்ந்து இலங்கையில் நடந்துவரும் முத்தரப்பு டி20 தொடரிலும் ரெய்னா இடம்பெற்றுள்ளார். இலங்கையுடனான முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, நேற்று வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்த இந்திய அணி 140 என்ற எளிய இலக்கை விரட்டியது. 27 பந்துகளில் 28 ரன்கள் அடித்த ரெய்னா, ஒரு சிக்ஸ் அடித்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் 50 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரெய்னா பெற்றுள்ளார். 

நேற்று விளையாடிய 70வது டி20 போட்டியில் 50வது சிக்ஸரை ரெய்னா விளாசியுள்ளார். இவருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் 50க்கும் அதிகமான சிக்ஸர்களை அடித்துள்ளனர்.

58 போட்டிகளில் 74 சிக்ஸர்களை யுவராஜ் சிங்கும், 76 போட்டிகளில் 69 சிக்ஸர்களை ரோஹித்தும் அடித்துள்ளனர். 

தோனி மற்றும் கோலி ஆகியோர் முறையே 46 மற்றும் 41 சிக்ஸர்களுடன் அடுத்த இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் சர்வதேச அளவில் 103 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.