இந்திய அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கு இன்று 32வது பிறந்தநாள். தோனி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரெய்னா, தற்போது ஃபார்மில்லாமல் தவித்துவருவதால் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். 

இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்பதால் இனிமேல் சுரேஷ் ரெய்னாவிற்கான வாய்ப்பு சந்தேகம்தான். எனினும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸில் செல்லப்பிள்ளையாக திகழும் சுரேஷ் ரெய்னா, அடுத்த சீசனிலும் சென்னை அணிக்காக ஆட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை அணியில் தக்கவைத்துள்ளது. 

தோனி தலைமையில் இந்திய அணி 2011ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோதும் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்றபோதும் அந்த அணியில் ரெய்னா இருந்தார். இவ்வாறு இந்திய அணிக்காக சில முக்கிய இன்னிங்ஸ்களை ஆடியிருக்கும் ரெய்னாவின் பிறந்தநாள் இன்று.

ரெய்னாவின் பிறந்ததினமான இன்று, அவர் ஆடிய இன்னிங்ஸ்களிலேயே மிகச்சிறந்த அதிரடியான இன்னிங்ஸை பார்ப்போம். எத்தனையோ அதிரடியான இன்னிங்ஸ்களை அவர் ஆடியிருந்தாலும், 2014ம் ஆண்டு ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு எதிராக அவர் ஆடிய ருத்ரதாண்டவம் கிரிக்கெட் ரசிகர்களால் என்றுமே மறக்கமுடியாத ஆட்டம். அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, சேவாக்கின் அதிரடியான சதத்தால் 20 ஓவர் முடிவில் 226 ரன்களை குவித்தது. 

227 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் டுபிளெசிஸின் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்துவிடும். பின்னர் களத்திற்கு வரும் ரெய்னா, பஞ்சாப் அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கிவிடுவார். 25 பந்துகளில் 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்த ரெய்னா, ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்துவிடுவார். அந்த இன்னிங்ஸ்தான் அவரது கிரிக்கெட் வாழ்வில் அவர் அடித்த முரட்டுத்தனமான இன்னிங்ஸ். அவரது பிறந்தநாளில் அந்த வீடியோவை பார்ப்போம்.