இந்திய அணியின் கேப்டன் கோலி நெருக்கடியான நிலையில் இருப்பதாக முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் முடிந்துள்ளன. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 3-1 என தொடரை வென்றுவிட்டது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. தொடர் தோல்வியிலிருந்து மீண்ட இந்திய அணி அதை தக்கவைத்து கொள்ளவில்லை. 

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களும் இந்திய அணி 273 ரன்களும் எடுத்தன. 27 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியை 200 ரன்களுக்கு உள்ளாக சுருட்டியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் இருந்தது. ஆனால் பவுலர்களை சரியாக பயன்படுத்தாததால் தான் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 271 ரன்களை குவித்தது என்ற விமர்சனம் எழுந்தது. 245 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 184 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

நான்காவது டெஸ்ட்டில் தோற்றதன் மூலம் தொடரையும் இழந்தது இந்திய அணி. இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய அணியில் 5 பிரத்யேக பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே கோலியை சார்ந்தே இருக்கிறார்கள். எல்லா போட்டியிலும் கோலியால் சதமடிக்க முடியாது. அவர் மனிதன் தானே தவிர எந்திரம் அல்ல என கவாஸ்கர் தெரிவித்தார். 

மேலும் கோலியின் கேப்டன்சி குறித்து பேசிய கவாஸ்கர், தோனியிடம் இருந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சி கோலியிடம் சென்றபோது இந்திய அணி நிச்சயம் வீழும் என நினைத்தனர். ஆனால் அந்த கூற்றை பொய்யாக்கும்படி, கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிகளை குவித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தையும் பிடித்தது. ஆனால் தற்போது ஒரு வீரராக சிறப்பாக செயல்படும் கோலி, கேப்டனாக சொதப்புகிறார். முக்கியமாக வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நான்கு ஆண்டுகள் கோலி கேப்டனாக இருந்தாலும் இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க கோலிக்கு தெரியவில்லை. வீரர்கள் சரியாக ஆடாத நிலையில், கேப்டனோ பயிற்சியாளரோ என்ன செய்ய முடியும்? எனினும் கோலி இப்போது நெருக்கடியான நிலையில் இருக்கிறார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.