இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மூன்றாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தனது அணியை மீட்டெடுக்க பட்லருடன் சேர்ந்து போராடினார். களத்தில் 50 ஓவருக்கும் மேலாக முழங்கால் வலியுடன் அவர் ஆடியது தெரியவந்துள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. 

மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முதல் நான்கு விக்கெட்டுகளை அந்த அணி, 62 ரன்களுக்கே இழந்துவிட்டது. இதையடுத்து பட்லரும் ஸ்டோக்ஸும் ஜோடி சேர்ந்து அந்த அணியை மீட்டெடுத்தனர். இருவரும் இணைந்து சுமார் 58 ஓவர்கள் ஆடினர். பட்லர் சதமும் ஸ்டோக்ஸ் அரைசதமும் அடித்தனர்.

இந்த இன்னிங்ஸில் ஸ்டோக்ஸ் 187 பந்துகளை எதிர்கொண்டார். அவர் முழங்கால் காயத்துடன் இந்த இன்னிங்ஸை ஆடியுள்ளார். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின்போதே இடது கால் முழங்காலுக்கு பின்புறத்தில் ஸ்டோக்ஸுக்கு வலி ஏற்பட்டு காலை பிடித்துள்ளார். எனினும் அந்த காயத்துடன் இரண்டாவது இன்னிங்ஸில் 187 பந்துகளை எதிர்கொண்டு அணிக்காக 62 ரன்களை சேர்த்தார். 

அடுத்த(நான்காவது) டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ம் தேதிதான் தொடங்குகிறது. எனவே அதற்கிடையே இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 தொடரின் காலிறுதி போட்டியில் ஆட இருந்தார். ஆனால் இந்த காயத்தின் காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தயாராக வேண்டும் என்பதால் டி20 போட்டியில் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் பட்லர் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் லங்காஷைர் அணிக்காக ஆட உள்ளனர்.