State-level volleyball competition Chennai Coimbatore teams accumulated success ...

மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சென்னை, கோவை அணிகள் சாம்பியன் வென்று அசத்தின.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே படர்ந்தபுளியில் லியா கைப்பந்து கழகம் சார்பில் கனரா வங்கி கோப்பைக்கான 15-வது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில கைப்பந்து போட்டிகள் நடைப்பெற்றன.

பகல் இரவு ஆட்டங்களாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற இதன் ஆண்களுக்கான போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. 

இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, சென்னை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 35க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. 

இறுதி ஆட்டத்தில் கேரள வாலி அணியும், கோவை தடாகம் சி.வி.சி. அணியும் மோதின. இதில் 3:1 என்ற புள்ளி கணக்கில் கோவை அணி வெற்றி பெற்றது.

பெண்களுக்கான போட்டிகள் லீக் முறையில் நடத்தப்பட்டன. இதில் 6 அணிகள் கலந்து கொண்டன. சென்னை தாம்பரம் அணியும், திருச்சி பிஷப் ஹீபர் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் 2:0 என்ற புள்ளி கணக்கில் சென்னை தாம்பரம் அணி வெற்றி பெற்றது.

பின்னர் நடைப்பெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.சீனிவாசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மண்டல அலுவலக கனரா வங்கி உதவிப் பொதுமேலாளர் காந்தி, வெற்றி பெற்ற அணிகளுக்கு கனரா வங்கி சுழற்கோப்பையை வழங்கி சிறப்பித்தார்.