srilanka all out for 205

இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டானது.

இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் புவனேஷ்குமார், தவான் ஆகியோருக்குப் பதிலாக இஷாந்த் சர்மா, முரளி விஜய் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதல் போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஷமி சேர்க்கப்படவில்லை. ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சண்டிமால், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக சமரவிக்ரமாவும் கருணரத்னேவும் களமிறங்கினர்.

சமரவிக்ரமா 13 ரன்களில் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில், புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய திரிமன்னே 9 ரன்கள் எடுத்திருந்தபோது, அஷ்வினின் அசத்தலான பந்துவீச்சில் போல்டானார். 

மேத்யூஸ், ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் வெளியேற, மற்றொரு முனையில் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த கருணரத்னே, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் வெளியேறினார்.

நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த அந்த அணியின் கேப்டன் சண்டிமால், அஸ்வின் சுழலிலும் டிக்வெல்லா, ரவீந்திர ஜடேஜாவின் சுழலிலும் வீழ்ந்தனர். அதன்பின் வந்த மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதையடுத்து இலங்கை அணி, 79.1 ஓவரில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில், அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இன்று இன்னும் 10 ஓவர்கள் எஞ்சியுள்ள நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்குகிறது.