இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 98.5 ஓவர்களில் 286 ஓட்டங்கள் சேர்த்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 64.5 ஓவர்களில் 205 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 81 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 90.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 406 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீபன் குக் 117 ஓட்டங்கள் குவித்தார்.

இலங்கைத் தரப்பில் டி சில்வா 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 488 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 83 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 240 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

கடைசி நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் கேப்டன் மேத்யூஸ் 59 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, எஞ்சிய வீரர்கள் விரைவாக வெளியேறினர். இதனால் அந்த அணி 96.3 ஓவர்களில் 281 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் காகிசோ ரபாடா, கேசவ மகாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுளை சாய்த்தனர்.

ஸ்டீபன் குக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி வரும் திங்கள்கிழமை கேப்டவுனில் தொடங்குகிறது.