Sri Lanka first innings score of 356 Sri Lanka to perform miracles against India?

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 130 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து ஆடி இந்தியாவுக்கு எதிரான அற்புதத்தை நிகழ்த்துமா இலங்கை?

இந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த அந்த அணியின் ஏஞ்ஜெலோ மேத்யூஸ், கேப்டன் தினேஷ் சண்டிமல் ஆகியோர் சதமடித்து அணியின் ஸ்கோரை பலப்படுத்தினர்.

டெல்லியில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது.

இதில் முரளி விஜய் - விராட் கோலி இணை அபாரமாக ஆடி சதம் அடிக்க, முதல் நாளில் இந்தியா 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 371 ஓட்டங்கள் எடுத்தது. முரளி விஜய் அதிகபட்சமாக 155 ஓட்டங்கள் விளாசினார்.

இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை கோலி 156 ஓட்டங்கள், ரோஹித் 6 ஓட்டங்களுடன் தொடங்கினர். அன்றைய ஆட்டத்தில் கோலி இரட்டைச் சதம் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். உடனிருந்த ரோஹித் 65 ஓட்டங்ளில் ஆட்டமிழக்க, எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வீழ்ந்தனர்.

இந்த நிலையில், 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 536 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது இந்தியா.

சாஹா 9 ஓட்டங்கள், ஜடேஜா 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கோலி அதிகபட்சமாக 243 ஓட்டங்கள் அடித்திருந்தார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை 2-ஆம் நாள் முடிவில் 44.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், 3-ஆம் நாளான நேற்று ஆட்டத்தை மேத்யூஸ் 57 ஓட்டங்கள், சண்டிமல் 25 ஓட்டங்களுடன் தொடங்கினர்.

அபாரமாக ஆடிய இந்த இணை அணியை சரிவிலிருந்து மீட்டு ஸ்கோரை உயர்த்தியது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.

இந்த நிலையில் 145 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார் சண்டிமல். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நீடித்த ஆட்டத்தில் மேத்யூஸ் 231 பந்துகளில் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் சதமடித்தார்.

இந்த இணை 97-வது ஓவரில் அஸ்வின் பிரித்தார். அவரது பந்துவீச்சை எதிர்கொண்ட மேத்யூஸ், கீப்பர் ரித்திமான் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அவர் 14 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 111 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

மேத்யூஸ் - சண்டிமல் இணை 4-வது விக்கெட்டுக்கு 181 ஓட்டங்கள் சேர்த்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் சண்டிமல் 265 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் சதமடித்தார்.

மேத்யூஸை அடுத்து வந்த சமரவிக்ரமா 33 ஓட்டங்களில் வெளியேற, சரியான பார்ட்னர்ஷிப் இன்றி தடுமாறினார் சண்டிமல். அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, மறுமுனையில் ரோஷன் சில்வா, நிரோஷன் டிக்வெல்லா அடுத்தடுத்து டக் ஔட் ஆனதுடன், சுரங்கா லக்மல் ஒற்றை இலக்க ஓட்டத்தில் வெளியேறினர்.

இவ்வாறாக 3-ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வர, இலங்கை 130 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சண்டிமல் 147 ஓட்டங்கள், லக்ஷன் சன்டகன் ஓட்டங்களின்றி ஆடி வருகின்றனர்.

இந்திய தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 3 விக்கெட்கள், ஷமி, இஷாந்த், ஜேடஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளனர்.