Sri Lanka and indan match are different Rahane ...

இலங்கையில் விளையாடிய தொடரும், தற்போது இந்தியாவில் விளையாட இருக்கும் தொடரும் முற்றிலும் வேறுபட்டதாகும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறினார்.

கடந்த ஜூலை மாதம் இலங்கை சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடர்களிலும் இலங்கையை 9-0 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்திருந்தது.

அதனையடுத்து இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக இந்தியா வந்துள்ளது இலங்கை அணி. இந்த நிலையில், ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று வலைப் பயிற்சியில் ஈடுபட்டதை அடுத்து, ரஹானே செய்தியாளர்களிடம் கூறியது:

"இலங்கையில் விளையாடிய தொடரும், தற்போது இந்தியாவில் விளையாட இருக்கும் தொடரும் முற்றிலும் வேறுபட்டதாகும். அந்தத் தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், தற்போது இலங்கையை எளிதான அணியாக எடைபோடவில்லை.

தற்போதைய நிலையில் டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பதே எங்கள் இலக்கு. அந்த வகையில், இப்போது எதிர்கொள்ளும் எந்தவொரு தொடரும் எங்களுக்கு முக்கியமான ஒன்றாகும்.

எதிர்வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால், தற்போது இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இந்தத் தொடரை பொருத்த வரையில், இலங்கைக்கும் இது முக்கியமான தொடராகும். அவர்களும் நல்ல முறையில் தயாராகி வந்துள்ளனர்.

இருப்பினும், அவர்களது வியூகங்கள் பற்றி கவலை கொள்ளாமல், எங்களது பலத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறோம்" என்று அவர் கூறினார்.