ஐபிஎல்லில் சூதாட்டப் புகாரில் சிக்கி வாழ்நாள் தடையை பெற்றதால் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிய ஸ்ரீசாந்த், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். 

சர்ச்சைக்கு பெயர்போன கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் வலம்வந்தவர். முதல் ஐபிஎல் சீசனில் ஹர்பஜன் சிங்கிடம் வம்பிழுத்து அறை வாங்கினார். அந்த விவகாரம் அந்த காலக்கட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 

தோனி தலைமையிலான இந்திய அணி 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றபோதும், 2011ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோதும் இந்திய அணியில் ஆடி முக்கிய பங்காற்றியவர் ஸ்ரீசாந்த். அவரது போதாத காலம் சூதாட்டப்புகாரில் சிக்கி கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்தது. 

2013 ஐபிஎல் சீசனில் சூதாட்டப் புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த் உட்பட மூன்று வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனமானது. அதன்பின்னர் சினிமாவில் நடித்த ஸ்ரீசாந்த், பாஜகவில் இணைந்து அரசியல் பிரவேசமும் எடுத்தார். 

தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஸ்ரீசாந்த், அங்கும் அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கி செய்தியானார். பிக்பாஸில் தனது கிரிக்கெட் வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் குறித்து அவ்வப்போது பேசிவருகிறார் ஸ்ரீசாந்த். அந்தவகையில் சூதாட்டப் புகாரில் சிக்கியது குறித்து சக போட்டியாளர்களிடம் பகிர்ந்துள்ளார் ஸ்ரீசாந்த். அந்த புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

அதில், வெறும் 10 லட்சம் ரூபாய்க்காக தான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தன் மீது குற்றம்சாட்டப்பட்டது மிகுந்த மனவேதனையை அளித்ததாகவும் அந்த காலக்கட்டம் தன் வாழ்நாளின் இருண்ட காலம் என்று தெரிவித்துள்ள ஸ்ரீசாந்த், சூதாட்டப்புகாரில் சிக்கி தனது கிரிக்கெட் வாழ்க்கை தன் கண்முன்னே அஸ்தமனமான போது தற்கொலை செய்துகொள்ளக்கூட முயன்றதாக வருத்தத்துடன் கூறியுள்ளார். அதைக்கேட்ட சக போட்டியாளர்கள் அவருக்காக வருந்தியதோடு, அவரை ஆற்றுப்படுத்தினர்.