தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளரான மோர்ன் மோர்கெல் குடும்பத்துக்கு முன்னுரிமை அளிக்க விரும்புவதால் ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்க தொடரில் இடம்பெற்றிருந்தார்தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளரான மோர்ன் மோர்கெல் (33).

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் களம் கண்ட மோர்ன் மோர்கெல், இதுவரை ஆடிய 83 போட்டிகளில் மொத்தமாக 294 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 5-ஆவது வீரர் மோர்கெல் ஆவார்.

அதேபோல், மொத்தம் ஆடிய 117 ஒருநாள் ஆட்டங்களில் 188 விக்கெட்டுகளையும், 44 டி20 ஆட்டங்களில் 47 விக்கெட்டுகளையும் மோர்கெல் வீழ்த்தியுள்ளார்.

இந்த நிலையியல் மோர்கெல், "இந்த முடிவு கடினமான ஒன்றுதான். ஆனால், எனது வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்க இதுவே சரியான நேரம் எனக் கருதுகிறேன். திருமண வாழ்வில் இணைந்துள்ள எனக்கு, சர்வதேச போட்டி அட்டவணையானது தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது.

எனவே, குடும்பத்துக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறேன். அதற்கு இந்த ஓய்வு முடிவே சரியான ஒன்றாக இருக்கும். தென் ஆப்பிரிக்க அணியில் விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் விரும்புகிறேன்.

இந்த தருணத்தில் எனது சக வீரர்கள், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம், எனது குடும்பம், நண்பர்கள், மற்றும் ஆதரவாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கிரிக்கெட்டில் எனக்கு இன்னும் ஆர்வம் உள்ளது. அடுத்து என்ன செய்வது என்று எதிர்நோக்கி வருகிறேன். தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி பெறச் செய்ய எனது முழு திறனையும் வெளிப்படுத்துவதிலேயே அனைத்து கவனமும் உள்ளது என்று மோர்ன் மோர்கெல்" என்று அவர் கூறினார்.