ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. 

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதன் முதல் போட்டியில், 118 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

அதன் பிறகான மூன்று போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் மூன்றாவது போட்டியில் 322 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

மூன்றாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதால், ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடையும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

அதனால் கடைசி போட்டியில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், நான்காவது போட்டியில் 492 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து ஆஸ்திரேலியா தொடரை இழந்துள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில், தென்னாப்பிரிக்கா 488 ரன்களும் ஆஸ்திரேலியா 221 ரன்களும் எடுத்தன. 267 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்த நிலையில், டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து 612 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, வெறும் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து 492 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.