ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றிப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 4-0 என முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவின் கைல் அபாட், டேபாரெய்ஸ் ஷம்ஸி ஆகியோரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது.
இதனால் ஆரோன் ஃபிஞ்ச் 2, டேவிட் வார்னர் 6, ஜார்ஜ் பெய்லி 1, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 21, டிராவிஸ் ஹெட் 0 என அடுத்தடுத்து வெளியேற, 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
6-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த மிட்செல் மார்ஷ்-மேத்யூ வேட் ஜோடி 62 ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலியா மிக மோசமான நிலையில் இருந்தது மீண்டது. மார்ஷ் 72 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த ஜான் ஹேஸ்டிங்ஸ் 4, ஆடம் ஸம்பா 5 ரன்களில் நடையைக் கட்டினர்.
இதன்பிறகு மேத்யூ வேட் 58 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதியில் 36.4 ஓவர்களில் 167 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா. டிரமெய்ன் 23 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் கைல் அபாட் 4 விக்கெட்டுகளையும், ஷம்ஸி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஆம்லா 4 ரன்களிலும், டி காக் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் அசத்தலாக ஆட, தென் ஆப்பிரிக்காவின் வெற்றி எளிதானது.
டுமினி 25, டூபிளெஸ்ஸிஸ் 69 ரன்கள் (87 பந்துகளில்) சேர்த்து ஆட்டமிழக்க, 35.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா. ரிலீ ரொசாவ் 33, பெஹார்டியன் 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் டிரமெய்ன் 2 விக்கெட் எடுத்தார்.
