ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காசிகோ ரபாடா படுமோசமான பந்து ஒன்றை வீசி அனைவரையும் மிரட்டினார். 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்றது. மேலும் நேற்று நடந்த ஒரே ஒரு டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

மழை காரணமாக 10 ஓவராக குறைக்கப்பட்டு நடத்தப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 108 ரன்களை குவித்தது. 109 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர் முடிவில் 87 ரன்களை மட்டுமே எடுத்ததால் தென்னாப்பிரிக்க அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது, ரபாடா வீசிய பந்து ஒன்று வீரர்கள், அம்பயர்கள், ரசிகர்கள் என அனைவரையுமே மிரட்டியது. 

9வது ஓவரை ரபாடா வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை மேக்ஸ்வெல் எதிர்கொண்டார். அந்த பந்தை வீச ஓடிவந்த ரபாடா, பந்தை வீசும்போது அது அவரது கையிலிருந்து நழுவி நேராக பாயிண்ட் திசையில் நின்ற ஃபீல்டரிடம் சென்றது. இதைக்கண்டு பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல், தென்னாப்பிரிக்க வீரர்கள் மற்றும் நடுவர்கள் அனைவரும் மிரண்டு போயினர். பின்னர் நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு நடுவர்கள், அந்த பந்தை செல்லாது என அறிவித்தனர். அதன்பின்னர் அதற்கு ரீ-பால் வீசப்பட்டது. 

பவுலர்கள் சில சமயம் மிக மோசமான அகலப்பந்துகளை வீசுவது வழக்கம். இல்லையென்றால் சில நேரங்களில் பந்து கைகளில் இருந்து நழுவி எங்காவது செல்லும். ஆனால் நேராக பாயிண்ட் திசையில் நிற்கு ஃபீல்டரிடம் செல்வது எல்லாம் ரொம்ப ஓவர் தான்.