முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 160.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 540 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, தனது 2-ஆவது இன்னிங்ஸ் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி, 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 55 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் எடுத்து தடுமாற்றத்துடனே இருந்தது.

இறுதி நாளான திங்கள்கிழமை, 6 விக்கெட்டுகளைக் கொண்டு தனது இலக்கான 370 ஓட்டங்களை எட்ட வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 63.4 ஓவர்களில் 242 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 70.2 ஓவர்களில் 244 ஓட்டங்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணி தனது 2-ஆவது இன்னிங்ஸின்போது 3-ஆவது நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 126 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 390 ஓட்டங்கள் எடுத்தது.

ஆட்டத்தின் 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமையை அந்த அணியின் டி காக் 16, பிலாண்டர் 23 ஓட்டங்களுடன் தொடங்கினர். இருவருமே அரைசதம் கடந்த நிலையில், டி காக், 64 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். பிலாண்டர் 73 ஓட்டங்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இந்நிலையில், 160.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 540 ஓட்டங்கள் குவித்திருந்தபோது, டிக்ளேர் செய்வதாக தென் ஆப்பிரிக்க அணி அறிவித்தது. கேசவ் மஹாராஜ் 41 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் ஷான் மார்ஷ் 15, உடன் வந்த டேவிட் வார்னர் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

உஸ்மான் கவாஜா அரைசதம் கடந்து நிலைக்க, ஸ்டீவன் ஸ்மித் 34, வோஜஸ் 1 ஓட்டத்தில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர்.

4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 55 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

கவாஜா 58, மிட்செல் மார்ஷ் 15 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.