South Africa beaten by england in nine wickets

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து.

தென் ஆப்பிரிக்காவுக்கான எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டம் இங்கிலாந்தின் செளதாம்ப்டன் நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களான ஸ்முட்ஸ் ரன் ஏதுமின்றியும், ஹென்ரிக்ஸ் மூன்று ஓட்டங்களிலும், டேவிட் மில்லர் ஒன்பது ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 4.1 ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து கேப்டன் டிவில்லியர்ஸூடன் இணைந்தார் பெஹார்டியன். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்கள் சேர்க்க, தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் சேர்த்தது.

டிவில்லியர்ஸ் 65 ஓட்டங்கள், பெஹார்டியன் 64 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேன் ராய் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை முதல் விக்கெட்டுக்கு 4.1 ஓவர்களில் 45 ஓட்டங்கள் சேர்த்தது. ஜேசன் ராய் 28 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார்.

இதனையடுத்து ஹேல்ஸூடன் இணைந்தார் ஜானி பேர்ஸ்டோவ். இந்த ஜோடி அதிரடியாக ஆட, 14.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் சேர்த்து வெற்றி கண்டது இங்கிலாந்து.

ஜானி பேர்ஸ்டோவ் 60 ஓட்டங்கள், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பேர்ஸ்டோவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.