ஆசிய கோப்பை தொடரில் தோனி சிறப்பாக ஆடுவதன் மூலமே ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஃபினிஷருமான தோனி, அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பிறகு கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அதேபோல் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகினார். இதையடுத்து கடந்த ஒன்றரை ஆண்டாக கோலி கேப்டனாக செயல்பட்டுவருகிறார். 

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி ஒரு வீரராக அணியில் ஆடிவரும் தோனி, அண்மைக்காலமாக ஃபார்ம் இல்லாமல் தவித்துவருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பேட்டிங் ஆடாத தோனி, இரண்டு மற்றும் மூன்றாவது போட்டிகளில் தலா 10 ஓவர்கள் பேட்டிங் ஆடி குறைந்த ரன்களையே இரண்டு போட்டிகளிலும் எடுத்தார். அந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வியை தழுவியது. 

இந்திய அணி ஏற்கனவே மிடில் ஆர்டரில் சொதப்பிவரும் நிலையில், சீனியர் வீரரான தோனியும் ஃபார்மில்லாமல் சொதப்புவது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. இங்கிலாந்தில் தோனி சரியாக ஆடாததை அடுத்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதுபோன்று ஏற்கனவே பலமுறை விமர்சனங்களை எதிர்கொண்ட தோனி, அதிலிருந்து மீண்டு வந்து தனது திறமையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். 

இந்நிலையில், மீண்டும் தனது திறமையை நிரூபித்து அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார். நடந்துவரும் ஆசிய கோப்பை தொடரிலும் ஹாங்காங் அணிக்கு எதிராக டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார் தோனி. பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இனிவரும் போட்டிகளில் தோனி எப்படி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தோனி குறித்து இந்தியா டிவிக்கு பேட்டியளித்த கங்குலி, ஆசிய கோப்பை தொடர் தோனிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. எந்த வீரராக இருந்தாலும் ஒரு லிமிட் இருக்கிறது. ரிஷப் பண்ட்டை ஆசிய கோப்பைக்கான அணியில் ரிஷப் பண்ட்டை எடுக்காதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என கங்குலி தெரிவித்துள்ளார். 

ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடி ஒருநாள் போட்டிக்கான அணியில் தனது இடத்தை தோனி உறுதி செய்ய வேண்டும் என்று கங்குலி கூறியிருப்பது தோனிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே உள்ளது.