2018-ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேகாலயம், மணிப்பூர், மிஸாரம், சிக்கிம், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் ஆகிய ஆறு வடகிழக்கு மாநிலங்கள் தனித் தனி அணிகளாக சேர்த்துக் கொள்ளப்படும் என்று பிசிசிஐ நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் இந்த வருடம் தங்களைச் சேர்க்கக் கோரி மேகாலயம், மணிப்பூர், மிஸாரம், சிக்கிம், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் ஆகிய ஆறு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழுவை நேற்று சந்தித்தன.

பின்னர் அதுதொடர்பாக, வடகிழக்கு மாநில கிரிக்கெட் சங்க அமைப்பாளரான நாபா பட்டாச்சார்ஜி கூறியது:

இந்த வருடம் ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் மேகாலயம், மணிப்பூர், மிஸாரம், சிக்கிம், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் ஆகிய ஆறு வடகிழக்கு மாநிலங்களும் ஓரணியாக இணைந்து விளையாட அனுமதிக்குமாறு பிசிசிஐ குழுவிடம் வலியுறுத்தினோம்.

ஆனால், இந்த வருடம் ரஞ்சி கோப்பையின் தொடக்க தேதி நெருங்கிவிட்டதால், இந்த சீசனில் எங்களைச் சேர்ப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்துவிட்டனர்.

ஆனால், அடுத்த ஆண்டில் ஆறு வடகிழக்கு மாநிலங்களும் தனித் தனி அணிகளாகவே பங்கேற்க வாய்ப்பளிக்கிறோம் என்று உறுதியளித்தது.

அதுதொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொறுப்பு பிசிசிஐயின் விளையாட்டு மேம்பாட்டு அதிகாரி ரத்னாகர் ஷெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், 16 மற்றும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான பிசிசிஐ போட்டிகளில் தனியே வடகிழக்கு மண்டலத்தை ஏற்படுத்தவும் சிஓஏ முடிவு செய்துள்ளது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் நாபா பட்டாச்சார்ஜி.