விஜய் ஹசாரே தொடரில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். 

ராகுல் டிராவிட்டிடம் பயிற்சி பெற்று வரும் வீரர்கள் திறமையிலும் மனவலிமையிலும் சிறந்த வீரர்களாக உருவாகி வருகின்றனர். இந்திய அணியில் ஆடும்போது அணிக்காக பெரும் பங்காற்றிய ராகுல் டிராவிட், ஓய்விற்கு பிறகும் இந்திய அணிக்காகவே உழைத்து கொண்டிருக்கிறார். 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி, இந்திய ஏ அணி ஆகியவற்றின் பயிற்சியாளராக இருக்கும் டிராவிட், பல இளம் திறமைகளை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறார். 

பிரித்வி ஷா, ஷுப்மன் கில், ஷிவம் மாவி, நாகர்கோடி, இஷான் கிஷான்  போன்ற சிறந்த வீரர்களை உருவாக்கி கொடுத்துள்ளார் ராகுல் டிராவிட். இவர்கள் ஐபிஎல்லிலும் சிறந்த தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆடிய ஷிவம் மாவி, ஐபிஎல்லிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்தியா ஏ அணிக்காகவும் ஆடினார். 

தற்போது விஜய் ஹசாரே தொடரில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான உத்தர பிரதேச அணிக்காக ஆடிவருகிறார். விஜய் ஹசாரே தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. உத்தர பிரதேசம் மற்றும் சவுராஷ்டிரா ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சவுராஷ்டிரா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணியின் தொடக்க வீரர்கள் உத்தப்பா மற்றும் ஷெல்டன் ஜாக்சன் ஆகிய இருவரும் அபாரமாக ஆடினர். உத்தப்பா 97 ரன்களிலும் சதம் விளாசிய ஷெல்டன் ஜாக்சன் 107 ரன்களிலும் அவுட்டாகினர். ஜாக்சனை ஷிவம் மாவி வீழ்த்தினார். சவுராஷ்டிரா இன்னிங்ஸின் கடைசி ஓவரின் இரண்டு, மூன்று மற்றும் நான்கு ஆகிய மூன்று பந்துகளில் முறையே சிராக் ஜானி, வசவாடா, உனாத்கத் ஆகிய மூவரையும் அடுத்தடுத்து வீழ்த்தினார்.

இந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த போட்டியில் 304 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய உத்தர பிரதேச அணி 278 ரன்களை மட்டுமே எடுத்ததால் 25 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்றது. உத்தர பிரதேச அணி தோற்றாலும் ஷிவம் மாவியின் ஹாட்ரிக் விக்கெட் அந்த அணிக்கு ஆறுதலை அளித்தது. இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசி 73 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷிவம் மாவி.