இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஷிகர் தவான், பஞ்சாப்பின் பங்ரா நடனத்தை ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்ற நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நான்கு போட்டிகளிலும் சரியாக ஆடாத குக், இந்த போட்டியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், முதல் இன்னிங்ஸில் 71 ரன்கள் குவித்தார். அவரை தவிர மொயின் அலி மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். மற்றபடி ரூட், பேர்ஸ்டோ, சாம் கரன், ஸ்டோக்ஸ் ஆகியோர் சோபிக்கவில்லை. 

133வது ரன்னில் இரண்டாவது விக்கெட்டாக குக்கின் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி 181 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 198 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி.

நேற்றைய ஆட்டம் முடிய இருந்த நிலையில், 89வது ஓவரின்போது, பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த தவான், பஞ்சாப்பின் பாரம்பரிய நடனமான பங்ரா நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார். தவானின் நடனம், வர்ணனையாளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தவானின் நடனத்தை கண்டு உற்சாகமடைந்த ஹர்பஜன் சிங், பங்ரா நடனத்தின் ஸ்டெப்பை போட்டார். பிறகு சக வர்ணனையாளரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரருமான டேவிட் லாய்டுக்கு பங்ரா நடனத்தை கற்றுக்கொடுக்க, லாய்டும் பங்ரா நடனம் ஆடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.