ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான், தனது காலத்தில் யார் சிறந்த வீரர் என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, தனது சுழலால் எதிரணி வீரர்களை மிரட்டியவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் 800 விக்கெட்டுகளுடன் இலங்கை சுழல் ஜாம்பவான் முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 708 விக்கெட்டுகளுடன் ஷேன் வார்னே இரண்டாமிடத்தில் உள்ளார். 

ஷேன் வார்னே தனது லெக் ஸ்பின்னால் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தவர். 1992ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக வார்னே ஆடியுள்ளார். தனது சுழலால் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். 

வார்னே ஆடிய காலத்தில் அவரது பவுலிங்கை பிரித்து மேய்ந்தவர்களில் முதன்மையானவர் சச்சின் டெண்டுல்கர். வார்னேவின் பவுலிங்கை அபாரமாக ஆடி ரன்களை குவித்தார் சச்சின். இவர்கள் ஆடிய காலக்கட்டத்தில் களத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பயங்கரமான போட்டியாளர்கள். சச்சினை போலவே லாராவும் வார்னேவின் பவுலிங்கை திறமையாக எதிர்கொண்டு ஆடி ரன்களை குவித்தார்.

வார்னே “நோ ஸ்பின்” என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், தனது கிரிக்கெட் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் ஆஸ்திரேலிய அணியில் நடந்த சர்ச்சைக்குரிய விஷயங்கள் என அனைத்து குறித்தும் வார்னே எழுதியுள்ளார்.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சுயசரிதை புத்தகம் குறித்து வார்னே பேசினார். அப்போது, என்னுடைய காலக்கட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேன்கள் சச்சின் டெண்டுல்கரும் லாராவும் தான் என்று எளிமையாக என்னால் கூறிவிடமுடியும். ஆனால் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதத்துக்குள் நான் வரவில்லை என்றார். 

ஒரு டெஸ்ட் தொடரின் கடைசி நாளில் ஒரு வீரர் சதமடிக்க வேண்டும் என்று நான் விரும்பினால், லாராவை களமிறக்குவேன். அதேநேரத்தில் ஒரு வீரர் ஆடுவதை வாழ்நாள் முழுவதும் ரசிக்க வேண்டுமென்றால் அது சச்சினின் ஆட்டம் தான். சச்சின் டெண்டுல்கர் ஆடுவதை ரசித்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அருமையாக ஆடுவார் சச்சின் என்று வார்னே புகழாரம் சூட்டினார்.