இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடரை இந்திய அணிதான் வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே அதிரடியாக தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. பிரிஸ்பேனில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் டக்வொர்த் முறைப்படி ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக ஆடிவரும் இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 அணியாக இருந்தும் வெளிநாடுகளில் தொடர்ந்து தோல்வியை தழுவிவருகிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களை இழந்த இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்துவதில் தீவிரமாக உள்ளது. 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் முன்னெப்போதையும்விட மிகவும் வலுவாக இருப்பது இந்திய அணிக்கு பலம். அத்துடன் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது இந்திய அணிக்கு கூடுதல் பலம். 

ஸ்மித்தும் வார்னரும் இல்லாமல் புதிய கேப்டனின் கீழ் திணறிவரும் ஆஸ்திரேலிய அணி, அணியை மறுகட்டமைத்து வருகிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. எனவே இந்தியாவுக்கு எதிராக வெல்லும் முனைப்பில் அந்த அணியும் தீவிரமாக உள்ளது. ஆனால் அந்த அணியின் அண்மைக்கால ஆட்டம் இந்திய அணியை வீழ்த்துமளவிற்கு இல்லை என்பதுதான் உண்மை. 

எனினும் கிரிக்கெட்டை பொறுத்தவரை போட்டி நடக்கும் அன்றைய தினத்தின் ஆட்டம்தான் போட்டியின் முடிவை தீர்மானிக்கும். 

இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ள நிலையில், இந்த தொடர் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே, ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் அனைத்து வகையிலும் சீரழிந்திருக்கிறது. எனவே அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள விரைவில் ஏதாவது செய்ய வேண்டும். என்னை பொறுத்தவரை இந்திய அணிதான் வெல்லப்போகிறது. இதுதான் உண்மையும் கூட. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து மோசமாக ஆடிவருவது வேதனையாக இருக்கிறது. போட்டியின் சூழலை அறியாமல் ஆடுவது, வீரர்கள் தேர்வு செய்யும் ஷாட்கள் ஆகியவை என்னை வேதனைப்படுத்துகின்றன.  தவறான ஷாட்களை தேர்வு செய்து விளையாடி போட்டியை கணிக்காமல் விட்டுவிடுகிறார்கள். எனவே இந்த தொடரை இந்திய அணிதான் வெல்லும் என வார்னே திட்டவட்டமாக கூறியுள்ளார்.