ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது இந்திய அணி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாராவின் பொறுப்பான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 250 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து நேற்று காலை முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பவுலர்கள் நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஃபின்ச்சை முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் இஷாந்த் சர்மா. பிறகு மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை சரித்தார் அஷ்வின். ஹேண்ட்ஸ்கோம்ப், பாட் கம்மின்ஸ் ஆகிய இரண்டு விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினார். டிம் பெய்னின் விக்கெட்டையும் இஷாந்த் சர்மா வீழ்த்தினார்.

இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மட்டும் அரைசதம் கடந்து நிதானமாக ஆடினார். அவரது விக்கெட்டை நேற்று முழுவதும் வீழ்த்த முடியவில்லை. நேற்றைய ஆட்டத்தில் இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். ஆனால் நேற்று முழுவதும் ஷமிக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.

இன்றைய ஆட்டம் தொடங்கியதும் மிட்செல் ஸ்டார்க்கை பும்ரா வீழ்த்தினார். பின்னர் மழையால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இருந்த டிராவிஸ் ஹெட்டை தனது முதல் விக்கெட்டாக வீழ்த்தினார் ஷமி. அதற்கு அடுத்த பந்திலேயே ஹேசில்வுட்டையும் வீழ்த்தி அந்த அணியின் முதல் இன்னிங்ஸை முடித்துவைத்தார் ஷமி.

ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இதையடுத்து 15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுலும் முரளி விஜயும் நிதானமாக ஆடிவருகின்றனர்.