இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் வென்று 2-0 என முன்னிலை வகிக்கும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று 1-1 என தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் களம் கண்டன. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களும் இந்திய அணி 283 ரன்களும் எடுத்தன. 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 287 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது. 

ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் முதல் நான்கு விக்கெட்டுகளை இந்திய அணி பெரிய சிரமமின்றி எடுத்துவிட்ட நிலையில், கவாஜா - டிம் பெய்ன் ஜோடி, ஐந்தாவது விக்கெட்டுக்கு களத்தில் நிலைத்து ஆடி 72 ரன்களை சேர்த்தது. இந்த ஜோடியை பிரிப்பது இந்திய அணிக்கு சிரமமாக இருந்தது. நேற்றைய மூன்றாம் நாளை முடித்த இந்த ஜோடி, நான்காம் நாளான உணவு இடைவேளை வரை விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் ஆடியது. 

அதனால் ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் பக்கம் திரும்பிய சமயத்தில், உணவு இடைவேளைக்கு பிறகான முதல் ஓவரிலேயே அற்புதமான பவுன்ஸரில் டிம் பெய்னை வீழ்த்தினார் ஷமி. ஷமியின் அபாரமான பவுன்ஸரில் திக்கு முக்காடிய டிம் பெய்ன், செய்வதறியாது ஜம்ப் செய்ய பந்து பேட்டில் பட்டு எகிற, கோலி கேட்ச் பிடிக்க டிம் பெய்ன் வெளியேறினார். அதன்பிறகு அந்த அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.